ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளச்சேதங்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்
ஆந்திராவில் நிவர் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளச்சேதங்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி ரேணிகுண்டாவில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
திருப்பதி,
ஆந்திராவில் நிவர் புயல் காரணமாக சித்தூர், கடப்பா, நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஒருசில இடங்களில் இன்னும் மழைநீர் வடியவில்லை. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது.
மேற்கண்ட 3 மாவட்டங்களில் வெள்ளச்சேதங்களை பார்வையிட முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி விஜயவாடாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு நேற்று காலை ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு, ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ஹெலிகாப்டரில் முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி ஏறி வானத்தில் பறந்தபடி வெள்ளச்சேதம் பாதித்த 3 மாவட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்த முதல்-மந்திரிக்கு 3 மாவட்ட அரசு அதிகாரிகள், துணை முதல்-மந்திரிகள் நாராயணசாமி, அம்ஜத் பாட்ஷா மற்றும் மந்திரி பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் பூமண. கருணாகர்ரெட்டி, ஆர்.கே.ரோஜா, ஆதிமுலம், எம்.எஸ். பாபு, துவாரகநாத் ரெட்டி, செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, ராமிரெட்டி பிரதாப்ரெட்டி, சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயணபரத்குப்தா, போலீஸ் டி.ஐ.ஜி கிரந்திராணா டாடா, போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், ரமேஷ்ரெட்டி, திருப்பதி மாநகராட்சி கமிஷனர் கிரிஷா, மாவட்ட கூடுதல் கலெக்டர் மார்கண்டேயலு, வருவாய் கோட்டாட்சியர் கனகநரசாரெட்டி மற்றும் கட்சி முக்கிய பிரமுகர்கள் பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முதல்-மந்திரி ரேணிகுண்டா வந்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.