தார்வார் டவுனில் பரபரப்பு: ஆந்திர போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிய ரவுடி கும்பல் - திருட்டு வழக்கில் பிடிக்க வந்தபோது சம்பவம்
தார்வார் டவுனில் திருட்டு வழக்கில் பிடிக்க வந்தபோது ரவுடி கும்பல், ஆந்திர போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
உப்பள்ளி,
தார்வாரில் டவுனில் பிரபல ரவுடியாக இருந்தவர் இர்பான். ரவுடி இர்பானை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு ரவுடி கும்பல் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது. இதற்கிடையே இர்பானின் கும்பலைச் சேர்ந்த 3 ரவுடிகள் ஆந்திராவில் திருட்டில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அவர்களை பிடிக்க ஆந்திரா போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்தநிலையில் திருட்டு வழக்கில் தலைமறைவாக உள்ள 3 ரவுடிகளும் தார்வார் டவுனில் சுற்றித்திரிவதாக ஆந்திரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் தார்வாருக்கு ஆந்திரா போலீசார் வந்தனர். அப்போது தார்வார் டவுன் சங்கம் சர்க்கிள் உப்பள்ளி-தார்வார் ரோடு லைன் பஜார் அனுமந்தா கோவில் அருகே 3 ரவுடிகளும் கையில் பீர் பாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர்.
இதைபார்த்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசிடம் இருந்து தப்பிக்க 3 பேரும் பீர்பாட்டில்களால் ஆந்திர போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கினர்.
இதில் ஆந்திர போலீஸ்காரர்கள் 2 பேர் படுகாயமடைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து 3 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உப்பள்ளி உதவி போலீஸ் கமிஷனர் அனுஷா மற்றும் தார்வார் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்த 2 போலீஸ்காரர்களையும் மீட்டு தார்வார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முன்னதாக ரவுடி கும்பல், ஆந்திர போலீசாரை தாக்கும்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தார்வார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 ரவுடிகளையும் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.