சிதம்பரம் அருகே, வாய்க்காலில் மூழ்கி 2 மாணவிகள் பலி - தோழிகளுடன் குளித்தபோது பரிதாபம்
சிதம்பரம் அருகே தோழிகளுடன் குளித்த போது வாய்க்காலில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-;
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பால்வாதூன்னான் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் மகாலட்சுமி (வயது 9). அதே பகுதியை சேர்ந்த ராயர் மகள் அனு என்கிற தார்நிஷா(11). அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாலட்சுமி 4-ம் வகுப்பும், அனு 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அதே பகுதியில் உள்ள கழுதை வெட்டி வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுபற்றி அறிந்த மகாலட்சுமியும், அனுவும் அதே பகுதியை சேர்ந்த தங்களது தோழிகள் 2 பேருடன் நேற்று மதியம் 1 மணி அளவில் கழுதை வெட்டி வாய்க்காலுக்கு சென்றனர். வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்றதால், அவர்கள் 4 பேரும் வாய்க்காலின் கரையோரம் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குளித்துக் கொண்டிருந்த மகாலட்சுமியும், அனுவும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவரையும் தண்ணீர் அடித்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது தோழிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டனர்.
இந்த சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளை தேடினர்.
ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு மாணவிகள் இருவரையும் பிணமாக மீட்டனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகளின் உடல்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.