திண்டுக்கல்லில் பரபரப்பு: குடகனாற்றில் தண்ணீர் திறக்கக்கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

குடகனாற்றில் தண்ணீர் திறக்கக்கோரி, பொதுப் பணித்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-28 07:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் காமராஜர் அணைக்கு தண்ணீர் வரும் இடத்தில் தடுப்புச்சுவரும், ராஜவாய்க்காலில் தடுப்பணையும் கட்டப்பட்டது. அந்த தடுப்பணையில் மதகுகள் அமைத்தும், ஷட்டர் பொருத்தவில்லை. இதனால் காமராஜர் அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. அதேநேரம் குடகனாற்றில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று போனது.

எனவே, குடகனாற்றில் தண்ணீர் திறக்கக்கோரி அதன் பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகம் மற்றும் பொதுப்பணி துறை அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்தனர். இதன் விளைவாக தண்ணீர் பங்கீடு தொடர்பாக வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. எனினும், இதுவரை குடகனாறு தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், கோட்டூர் ஆவாரம்பட்டி, பாலம் ராஜக்காபட்டி, வேடசந்தூர் உள்பட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வறட்சி நிலவுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். இதையடுத்து ராஜவாய்க்கால் தடுப்பணையில் மதகை அடைத்து, குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ஆனால், அடைத்த மதகை சிலர் திறந்து விட்டதால் குடகனாற்றில் தண்ணீர் வருவது நின்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த குடகனாறு பாசன விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு குடகனாற்றில் தண்ணீர் திறக்கும்படி பொதுப்பணி துறை அதிகாரிகளை, விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

அப்போது வல்லுனர் குழு மூலம் குடகனாறு தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், மதகை திறந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடகனாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்தனர். அப்போது அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளை அதிகாரிகள் சமரசம் செய்து வல்லுனர் குழுவை சந்திக்கும்படி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்