250 நாட்களாக நீடிக்கும் தடை: ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு நியாயம்; தனுஷ்கோடிக்கு ஒரு நியாயமா? சுற்றுலா பயணிகளை உடனடியாக அனுமதிக்க கோரிக்கை
ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சுமார் 250 நாட்கள் ஆகிய பின்னும் தனுஷ்கோடிக்கு மட்டும் இன்னும் தடை தொடருவதால் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரை மற்றும் அரிச்சல்முனை சாலைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை அமலில் இருந்துவருகிறது.
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் தனுஷ்கோடி பகுதிக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஆட்கள் யாரும் செல்ல முடியாததால் அந்த பகுதி சுமார் 250 நாட்களுக்கும் மேலாக வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் கம்பிபாடு சாலையோரத்தில் சங்கு மற்றும் சிப்பி வியாபாரம் செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். வருகிற 30-ந் தேதியுடன் பொது ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் டிசம்பர் மாதம் முதல் தனுஷ்கோடி கம்பிபாடு மற்றும் அரிச்சல்முனை வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்களும் மற்றும் ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 8 மாதத்திற்கு மேலாக தனுஷ்கோடிக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படாததால் சுற்றுலாப்பயணிகளை நம்பி வாழும் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களும், நூற்றுக்கும் அதிகமான வாடகை, கார், வேன் ஓட்டுனர்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு நியாயம், தனுஷ்கோடிக்கு ஒரு நியாயம் என்பது போல் பாகுபாடு காட்டப்படும் நிலை உள்ளது. எனவே இனியாவது எங்கள் நிலையை புரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.