அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தால் நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை
அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு தனியார் பள்ளிக்கூட மாணவர்களுக்கு பயிற்சி அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
கடத்தூர்,
கோபி தொகுதிக்கு உட்பட்ட நாதிபாளையம், நாகதேவன்பாளையம், சிறுவலூர், மொடச்சூர், அயலூர், உள்பட 16-க்கும் மேற்பட்ட இடங்களில் ரூ.2 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நிவர் புயல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுத்துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டார். இதனால் பாதிப்புகள் தடுக்கப்பட்டதாக பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரடியாக சென்று தண்ணீர் திறந்து விட்டும், கடைக்கோடியான கடலூருக்கு நேரில் சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு நிவாரணங்களையும் வழங்கினார்.
மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யவும், மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் ஒவ்வொரு பாடத்துக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளின்படி முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து முடிவெடுப்பார். நூலகங்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு தனியார் பள்ளிக்கூட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க செல்வதாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.