ஆந்திர அணையில் தண்ணீர் திறப்பு: வேலூர் பாலாற்றில் பாய்ந்தோடும் வெள்ளம் - ஏரிகளுக்கு செல்லும் கால்வாயை தூர்வார கோரிக்கை
வேலூர் பாலாற்றில் பாய்ந்தோடும் வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஏரிகளுக்கு செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர்,
‘நிவர்’ புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 2 நாட்கள் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கவுண்டய ஆறு, அகரம் ஆறு மற்றும் காட்டாறுகளில் இருந்து வரும் மழைநீர் பாலாற்றில் கலந்து வேலூர் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் பழைய மற்றும் புதிய பாலத்தில் நின்று பாலாற்றில் செல்லும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தனர். தங்களது செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
பாலாற்றில் உள்ள செடி, கொடிகளை மேய்ந்து கொண்டிருந்த 3 பசுமாடுகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அதில் 2 மாடுகள் வெள்ளத்தில் இருந்து மீண்டுவந்துவிட்டன. ஒரு மாடு மட்டும் மாட்டிக் கொண்டது. அதை பொதுமக்கள் மீட்க போராடியும் முடியவில்லை. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் பசு மாட்டை மீட்டனர். இதை பாலத்தில் நின்றிருந்தபடி பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்த்தனர்.
இதனிடையே ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கலவகுண்டா அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பொன்னை ஆற்றில் பாய்ந்தது. மேலும் பொன்னை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 42,680 கனஅடிநீர் ஆற்றில் செல்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளப்பெருக்கை காணவும், அதனை செல்போனில் படம் பிடிக்கவும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். ஆர்வமிகுதியால் சிலர் தண்ணீரில் இறங்கி விளையாட தொடங்கினர். அவர்களை வருவாய்த்துறையினர், போலீசார் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். யாரும் ஆறு, ஏரிகளில் குளிக்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கரையோர பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலாற்றில் இருந்து பெரியஏரி, கடப்பேரி, சதுப்பேரி ஆகிய ஏரிகளுக்கு பொய்கை அருகே கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்லும். ஆனால் இந்த ஏரிகளுக்கு நீர்செல்லும் கால்வாயை தூர்வாராததால் சிறிது தூரம் சென்ற மழைநீர் மீண்டும் பாலாற்றுக்கே திரும்பியது. எனவே இந்த கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகளும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.