ராணிப்பேட்டை அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; மின்கம்பம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

ராணிப்பேட்டை அருகே பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பழைய பாலம் அருகே மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-28 05:45 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

நிவர் புயல் காரணமாக பெய்த மழையினால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த மழை காரணமாக ராணிப்பேட்டை அருகே பாலாற்றில் நேற்று முன்தினம் லேசான வெள்ளம் வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ராணிப்பேட்டை அருகே உள்ள பாலாற்றில், பழைய பாலத்தின் நுழைவு பகுதியில் கரையோரம் இருந்த மின் கம்பம் ஒன்று நேற்று காலை திடீரென்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இதனால் மின் கம்பத்தில் இருந்த வயர்களும் அறுந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதித்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்கம்பம், மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பாலாற்றில் வெள்ளம் செல்வதை பார்க்க பொதுமக்கள் குடும்பத்தினருடன் சென்றனர். இந்த நேரத்தில், பொதுமக்கள் செல்லும் சாலையில் மின் கம்பம் விழுந்தது. மின்சாரம் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்