திருப்பத்தூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடிநீர் வழங்காததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 16 நாட்களாக குடிநீர் வழங்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-11-28 04:45 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் வீட்டு வசதி குடியிருப்பு பகுதி -1 மற்றும் பகுதி -2 உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் தர்மபுரி தென்பெண்ணை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 16 நாட்களாக இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஓய்வு பெற்ற மின்சார வாரிய அலுவலர் எஸ்.விஜயன் தலைமையில் காலிக்குடங்களுடன் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியிலுள்ள நகராட்சி குடிநீர் மற்றும் வீட்டு வரி வசூல் செய்யும் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.

குடிநீர் வழங்காதது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “தென்பெண்ணை ஆற்று பகுதியில் இருந்து மோட்டார் மூலம் குடிநீர் அனுப்பும் பணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் தராததால் தண்ணீரை அவர்கள் அங்கிருந்து மோட்டார் மூலம் திருப்பத்தூர் பகுதிக்கு அனுப்பவில்லை” என குற்றம் சாட்டினர்கள். அப்போது அவர்களிடம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உறுதி அளித்தார்.

அதன் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்