மகாதீபம் ஏற்றப்படுவது இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேட்டி
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் வீடுகளிலிருநந்தே நேரடியாக காணலாம்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நாளை ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவிலில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வரவேற்றார்.
இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் வருகிற 29-ந் தேதி மகா தீபத்தன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்கள் துறை ரீதியாக விரிவாக எடுத்துரைத்தனர்.
பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. அன்று கோவிலின் உள்ளே பக்தர்கள், பொதுமக்கள் சாமி செய்ய அனுமதி இல்லை. அதனால் வீட்டில் இருந்த படி விழா நிகழ்வுகளை பக்தர்கள் காண தொலைக்காட்சி, யூடியுப், கோவில் இணைய தளம், அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மகா தீபம் தரிசனம் செய்திட மலை மீது ஏறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலை மீது ஏற உள்ள 16 வழிதடங்களிலும் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள காலி மைதானத்தில் வருடந்தோறும் நடைபெறும் மாடு மற்றும் குதிரை சந்தை நடத்த அனுமதி கிடையாது. ஞாயிற்றுக்கிழமை மகா தீப திருவிழாவினை திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரினை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்தே அண்ணாமலையார் மலை உச்சியின் மீது ஏற்றப்படும் தீபத்தினை தரிசிக்கலாம்.
பொதுமக்கள் நகரின் எந்தவொரு பகுதியிலும் தேவையின்றி கூடாமலும், கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமலும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி (திங்கள்கிழமை) வரை 3 நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்குள் வெளியூரில் இருந்து பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லையில் 15 இடங்களிலும், நகர பகுதியில் 7 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல் துறையினர் மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர். தீபத் திருவிழா பாதுக்காப்பு பணியில் 2 ஆயிரத்து 100 போலீசார் ஈடுபட உள்ளனர்.
மேலும் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம், அந்தியந்தல், திருக்கோவிலூர் ரோடு, கள்ளக்குறிச்சி சாலை என 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயசுதா, திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி மற்றும் பல்வேறு துறைஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.