நிவர் புயலால் மின்வாரியத்திற்கு ரூ.15 கோடி சேதம் - அமைச்சர் தங்கமணி பேட்டி
நிவர் புயலால் மின்வாரியத்திற்கு ரூ.15 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பஸ்நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்மா இ-சேவை மைய திறப்புவிழா, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள், முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கும் விழா ஆகியவை நடந்தது.
இதில் கலந்துகொள்ள வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சரின் முன்எச்சரிக்கை நடவடிக்கையால் விபத்தில்லாமல் புயலை எதிர் கொண்டுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, விழுப்புரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் உடனடியாக 80 சதவீத மின்வினியோகம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு 100 சதவீதம் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 95 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் முழுமையாக மின்வினியோகம் வழங்கப்பட்டு விடும்.
புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே 144 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்திருந்தேன். தற்போது திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களையும் சேர்த்து 2,488 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் 108 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. மின்வாரியத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் தண்ணீர் அதிகம் உள்ளது. அந்த பகுதிகளிலும் எதிர்காலத்தில் முழுமையாக புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு விவரங்களை எடுத்துரைப்பார். அதன்பின்னர் நிவாரணம் கோரப்படும்.
மின்வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுதொடர்பாக மின்சங்கங்கள் தொடுத்த வழக்கு முடிந்தவுடன், 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்குவார். அரசு வக்கீலிடம் கூறி, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, மாவட்ட கலெக்டர் மெகராஜ், உதவி கலெக்டர் மணிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், திருச்செங்கோடு நகர அ.தி.மு.க. செயலாளர் மனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்லப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.