ஐகோர்ட்டு தடை நீக்கம் எதிரொலியாக 8 மாதங்களுக்கு பிறகு திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பு - இன்று முதல் செயல்படுகிறது
திருச்சியில் 8 மாதத்திற்கு பின்பு மீண்டும் காந்தி மார்க்கெட் நேற்று திறக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
திருச்சி,
திருச்சி காந்தி மார்க்கெட் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டது. அங்கிருந்த மொத்த வியாபாரிகள் அப்புறப்படுத்தப்பட்டு திருச்சி பொன்மலையில் ரெயில்வேக்கு சொந்தமான ஜி.கார்னர் திடலில் இரவில் மட்டும் மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
காந்தி மார்க்கெட் சில்லரை வியாபாரிகளுக்கு திருச்சியில் பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது. இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் காந்தி மார்க்கெட்டை திறக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்தது.
காந்தி மார்க்கெட் திறப்பதற்கான தடையை நீக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. கடைசி முயற்சியாக 2 நாட்கள் காய்கறி விற்காமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐகோர்ட்டு, இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும் சில நிபந்தனைகளையும் விதித்தது.
இந்த நிலையில் 8 மாதத்திற்கு பின்பு நேற்று காலை காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ரிப்பன் வெட்டி காந்தி மார்க்கெட்டை திறந்து வைத்தார். பின்னர், காந்தி மார்க்கெட் நுழைவு வாயிலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது, காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்க பெரும் முயற்சி எடுத்த அமைச்சர், கலெக்டர், ஆணையர் ஆகியோரை வாழ்த்தி வியாபாரிகளால் கோஷம் எழுப்பப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாவட்ட தலைவர் ஸ்ரீதர், இளைஞர் அணி தலைவர் அப்துல் ஹக்கீம், திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அனைவரும் வெறிச்சோடி கிடந்த காந்தி மார்க்கெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. மார்க்கெட்டில் காற்று அடித்தால் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மேற்கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
அடிப்படை வசதிகள் அனைத்தையும் நேற்று ஒரே நாளில் செய்து முடிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இன்று (சனிக்கிழமை) முதல் காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனையை தொடங்க வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மார்க்கெட்டை சுற்றிப்பார்த்த பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் காந்தி மார்க்கெட் மாற்றப்பட்டது. கடந்த 8 மாதமாக வியாபாரிகள் அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இடையில் தனிநபர் ஒருவர், ஐகோர்ட்டில் தடை பெற்று விட்டதால் சற்று மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். பின்னர் தடையை அகற்ற, கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் சென்னை சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களின் சொல்லணா துயரத்தை எடுத்து கூறினர். அதன் அடிப்படையில் ஐகோர்ட்டில் தடை அகற்றப்பட்டு, காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட் டுள்ளது. எனவே, வியாபாரிகள் தொடர்ந்து இயங்க சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் மேற்கொள்ள வேண்டும். இனி அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் படி வியாபாரிகளும், பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.