நிவர் புயலால், பல லட்சம் மதிப்பிலான 300 ஏக்கர் கரும்புகள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை
நிவர் புயலால் பல லட்சம் மதிப்பிலான 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவெண்காடு,
சீர்காழி அருகே உள்ள அல்லி விளாகம், செம்பதனிருப்பு, காத்திருப்பு, ராதாநல்லூர் ஆலங்காடு, நடராஜ பிள்ளை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் பயிரிடப்பட்டு உள்ளன. இந்த கரும்புகள் நன்கு விளைந்த பின்னர் அவற்றை அறுவடை செய்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பர். இதனால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
தற்போது கரும்புகள் நன்றாக செழித்து வளர்ந்து இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய நிவர் புயல் காற்றினால் அனைத்து கரும்புகளும் அடியோடு சாய்ந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கூறுகையில், ஒரு ஆண்டு பயிரான கரும்புகள் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ளன. இன்னும் இரண்டு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய கரும்புகள் நிவர் புயலால் முற்றிலும் சாய்ந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்புகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.