கும்பகோணம் அருகே கார் மோதியதில் தாய்-மகன் பலி
கும்பகோணம் அருகே கார் மோதியதில் தாய்- மகன் பலியானார்கள்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் தோப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா(வயது 45). இவரது மனைவி அபிராமி(40). இவர்கள் இருவரும் கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சென்னை பைபாஸ் சாலை கோவிலாச்சேரி பகுதியில் இவர்கள் சென்றபோது எதிரே வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் சாலையோரம் விழுந்த இளையராஜா காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது பின்னால் உட்கார்ந்திருந்த அபிராமி காயமின்றி தப்பினார்.
பின்னர் அந்த கார் எதிரே ஸ்கூட்டரில் வந்த குமரன்குடி குடியானத்தெரு பகுதியை சேர்ந்த செல்வம் என்கிற கலியமூர்த்தி(45) மற்றும் அவரது தாயார் அஞ்சம்மாள்(60) ஆகியோர் மீதும் மோதியது. இதில் செல்வம் மற்றும் அவரது தாயார் அஞ்சம்மாள் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. காரை ஓட்டிய டிரைவர் தப்பியோடி விட்டார். விபத்து குறித்து கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.