தஞ்சையில், துணிகர சம்பவம்: ஆயில் மில்லில் ரூ.1 லட்சம் திருட்டு - கேமராக்களில் உருவம் பதிவானதால் கழற்றிச்சென்ற மர்ம நபர்கள்
தஞ்சையில், ஆயில் மில்லில் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள், கேமராக்களில் தங்கள் உருவம் பதிவானதால் அதை கழற்றி சென்று விட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை டபீர்குளம் சாலையை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 61). இவர், தஞ்சை கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவில் ஆயில் மில் மற்றும் ஆயில் விற்பனை கடை வைத்துள்ளார். இங்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என அனைத்து வகை எண்ணெய்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையின் பின்புறம் தற்காலிகமாக தகர சீட்டினால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சாவியை பேச்சிமுத்துவிடம் கொடுத்தனர். அவர், வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், கடையின் பின்பக்கமாக சென்று தகர சீட்டில் இருந்த ‘ஸ்குரு’வை லாவகமாக கழற்றினர்.
பின்னர் தகர சீட்டை அப்புறப்படுத்தி விட்டு ஆயில் மில் மற்றும் கடைக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அங்கு கல்லாப்பெட்டியை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடினர். அப்போது அவர்கள் கடையை சுற்றிப்பார்த்தபோது கடைகளுக்குள் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களது உருவங்கள் மட்டுமின்றி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் என்பதால் இந்த காட்சிகளை எல்லாம் பதிவு செய்யும் ‘ஹார்ட் டிஸ்க்’கை கழற்றி கொண்டு வந்த வழியாகவே மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
நேற்று காலையில் வழக்கம்போல் ஆயில் மில் மற்றும் கடையை திறப்பதற்காக பேச்சிமுத்து வந்தார். கடையை திறந்து உள்ளே சென்றபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்ததை கண்டும், தகர சீட்டு அகற்றப்பட்டு கிடந்ததை கண்டும் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய முயன்றார். அப்போது அதில் ‘ஹார்டு டிஸ்க்’ இல்லாததை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் இந்த திருட்டு குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கிழக்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனி பகுதியில் ஆடிட்டர் வெங்கட்ராமன் என்பவரது அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மடிக்கணினியை திருடிச்சென்று விட்டனர். அந்த அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்ததால் மர்ம நபர்கள் ‘ஹார்ட் டிஸ்க்’கை கழற்றி சென்று விட்டனர்.
நேற்று காலை அலுவலகத்திற்கு வந்த வெங்கட்ராமன் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்து மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.