பூட்டிய வீட்டுக்குள் குளிர்காய தீமூட்டியதால் பரிதாபம்: தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மூச்சுத்திணறி சாவு - பெற்றோர் உள்பட 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

பூட்டிய வீட்டுக்குள் குளிர்காய தீமூட்டியதால் மூச்சுத்திணறி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தாள். அவளது பெற்றோர் உள்பட 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-11-27 22:30 GMT
சிக்பள்ளாப்பூர், 

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா மராத்தி பால்யா கிராமத்தை சேர்ந்தவர் வீர ஆஞ்சனேயா. இவரது மனைவி சாந்தம்மா. இவருக்கு அர்ச்சனா (வயது 15), அர்ஷிதா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். வீர ஆஞ்சனேயா, சாந்தம்மா ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. அத்துடன் கடும் குளிரும் நிலவியது. இந்த நிலையில் வீரஆஞ்சனேயா-சாந்தம்மா தம்பதி குளிர்காய்வதற்காக வீட்டின் படுக்கை அறையில் ஒரு இரும்பு பீப்பாயில் விறகு கட்டைகளை போட்டு தீமூட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு மகள்களுடன் தூங்கியுள்ளனர்.

அப்போது திடீரென்று அறை முழுவதும் புகை பரவியது. இந்த புகையை சுவாசித்த வீர ஆஞ்சனேயா, சாந்தம்மா, மகள்கள் அர்ச்சனா, அர்ஷிதா ஆகியோர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். சிறிது நேரத்தில் அர்ச்சனா துடி, துடித்து பலியானார்.

இதுற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, வீரஆஞ்சனேயா, அவரது மனைவி சாந்தம்மா, அர்ஷிதா ஆகிய 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கவுரிபித்தனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான சிறுமி அர்ச்சனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்தும் மஞ்சேனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குளிர் காய்வதற்காக அறை கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு வீரஆஞ்சனேயா- சாந்தம்மா தம்பதி வீட்டுக்குள் ஒரு இரும்பு பீப்பாயில் விறகு கட்டைகளை போட்டு தீமூட்டியுள்ளனர். அதில் இருந்து வெளியேறிய கார்பன் மோன்ஆக்சைடு நச்சு புகை அறை முழுவதும் நிரம்பியுள்ளது. அந்த புகையை சுவாசித்தபடி தூங்கிக் கொண்டிருந்ததால் அர்ச்சனா மூச்சுத்திணறி பலியானது தெரியவந்தது.

இதுதொடர்பாக மஞ்சேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்