பெங்களூருவில் காதல் விவகாரத்தில் தலையில் கல்லை போட்டு டிரைவர் கொலை - நண்பர் உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில், காதல் விவகாரத்தில் தலையில் கல்லை போட்டு டிரைவரை கொலை செய்த நண்பர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார்(வயது 26). சரக்கு ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் லோகேஷ். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரவிக்குமாருக்கு, ஒரு இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் 2 பேரும் பழகி வந்தனர். மேலும் அந்த இளம்பெண்ணை, ரவிக்குமார் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே அந்த இளம்பெண்ணை, தனது நண்பர் லோகேசுக்கு, ரவிக்குமார் அறிமுகப்படுத்தி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் லோகேசும் அந்த இளம்பெண்ணை காதலித்து உள்ளார். அவர் தனது காதலை அந்த இளம்பெண்ணிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவிக்க 2 பேரும் காதலித்து வந்தனர். இதற்கிடையே ரவிக்குமார், இளம்பெண்ணை காதலிப்பது லோகேசுக்கு தெரிந்தது. இதனால் அவர் ரவிக்குமாரிடம், இளம்பெண்ணை காதலிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு ரவிக்குமார் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ரவிக்குமார் அதன்பின்னர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ரவிக்குமாரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் ரவிக்குமார் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் பையப்பனஹள்ளி போலீசில் பெற்றோர் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரில் மாயமான ரவிக்குமாரை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் பன்னரகட்டா பகுதியில் உள்ள கோழிப்பண்ணை அருகே தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக பன்னரகட்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அது மாயமானதாக தேடப்பட்ட ரவிக்குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீசாருக்கு, பன்னரகட்டா போலீசார் தகவல் தெரிவித்தனர். ரவிக்குமார் மாயமானதாக பையப்பனஹள்ளி போலீசில் வழக்குப்பதிவு ஆகி இருந்ததால், இந்த கொலை வழக்கும் பையப்பனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரம் தொடர்பாக ரவிக்குமாருக்கும், லோகேசுக்கும் பிரச்சினை இருந்தது தெரிந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனது நண்பர்களான சச்சின், ரஞ்சித் ஆகியோருடன் சேர்ந்து ரவிக்குமாரை கொலை செய்ததை லோகேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து லோகேஷ், சச்சின், ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.