இந்து மகாசபா மாநில செயலாளர் கொலை: ஊத்தங்கரை கோர்ட்டில் 3 பேர் சரண்
ஓசூரில் இந்து மகா சபா அமைப்பின் மாநில செயலாளர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 3 பேர் ஊத்தங்கரை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). இவர் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 22-ந்தேதி காலை சமத்துவபுரம் எதிரில் அனுமந்த நகரில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் அங்கு வந்து நாகராஜை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாகராஜை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் ரத்த வெள்ளத்தில் பலியானார். அவரை வெட்டிக்கொலை செய்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றது. இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
3 பேர் கோர்ட்டில் சரண்
இந்த நிலையில் இந்து மகா சபா மாநில செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓசூர் அனுமந்தபுரத்தை சேர்ந்த 3 பேர் நேற்று ஊத்தங்கரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி திருஞானசம்பந்தர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ் (39), அருண்குமார் (27) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இவர்களுடன் நரேஷ், அப்பு உள்பட 6 பேர் சேர்ந்து நாகராஜை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் தலைமையிலான போலீசார் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரமேஷ், நாகராஜிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி கொடுக்காததால் நாகராஜ், ரமேசை தாக்கியதாக தெரிகிறது. பொது இடத்தில் தன்னுடைய தகப்பனார் ரமேஷ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அபிசேகர், நாகராஜிடம் கேட்டதாக தெரிகிறது.
ஒருவர் கைது
அப்போது அவரையும் நாகராஜ் தரக்குறைவாக திட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பழிதீர்க்கும் விதமாக நாகராஜை அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஓசூர் சப் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் 3 பேரையும் ஓசூர் சிறையில் அடைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைய வந்த ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.