ஈரோடு மாவட்டத்தில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் 484 பேரை கைது செய்தனர்.
ஈரோடு,
அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாய சங்கங்கள் சார்பில் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
கொரோனா உதவித்தொகையாக அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். புதிய வேளாண் சட்டத்தையும், தொகுப்புகளாக மாற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்களையும், மின் திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலை திட்டப்பணியை, 200 நாட்களாக உயர்த்தி, அந்த தொழிலாளர்களுக்கான கூலியையும் உயர்த்தி வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
484 பேர் கைது
இதேபோல் சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டி, கடம்பூர், மொடக்குறிச்சி, கோபி பகுதிகளிலும் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 484 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.