நிவர் புயல் எதிரொலியாக திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை எவ்வித பாதிப்பும் இல்லை

நிவர் புயல் எதிரொலியாக திருச்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை வேளையில் பரவலாக மழை பெய்தது.

Update: 2020-11-27 10:02 GMT
திருச்சி, 

வங்க கடலில் மையங்கொண்ட நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரிக்கும், மரக்காணத்திற்கும் இடையே கரையை கடந்தது. இருப்பினும், திருச்சி மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

அதாவது, கனமழை, மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ள பகுதிகளாக 154 இடங்கள் கண்டறியப்பட்டு வருவாய்த்துறை மற்றும் இதரத்துறை ஊழியர்கள் மூலம் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. அங்கு வசித்த மக்கள் தாழ்வான பகுதியில் இருந்து வெளியேறி தங்குவதற்கு வசதியாக 118 பள்ளிகள், 5 கல்லூரிகள், 11 சமுதாய கூடங்கள், 23 திருமண மண்டபங்கள், இன்னும் 2 பிற இடங்கள் என 159 இடங்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பாதிப்பு இல்லை

ஆனால், புயல் கரையை கடந்த சில மணி நேரத்தில் மாவட்டத்தில் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. பெரிய அளவில் காற்றோ, மழையோ பெய்யவில்லை என்பதால் எவ்வித பாதிப்பும் இன்றி மக்கள் நிம்மதியடைந்தனர். அதே வேளையில் மழையால் திருச்சி மாநகரில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். சில வீதிகள் சேறும், சகதியுமாக மாறின. திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பெரும்பிடுகு முத்திரையர் சிலை அருகில் மழையால் தார்சாலை அரித்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் வாகன நடமாட்டம் உள்ள பகுதியில் தார்சாலையில் பள்ளம் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று கவனத்துடன் செல்லாவிட்டால் விபத்தில் சிக்க நேரிடும் என்றும், சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அருவிக்கு நீர்வரத்து

மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பச்சைமலை அருகே உள்ள மங்களம் அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்