எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் 1,008 மீட்டர் திரி- தீப கொப்பரையை தயார்படுத்தும் பணி தொடங்கியது

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இதற்காக 1,008 மீட்டர் திரி- தீப கொப்பரையை தயார்படுத்தும் பணி தொடங்கியது.

Update: 2020-11-27 09:01 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபதிருவிழா கொண்டாடப்பட உள்ளது. 38-வது ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பிரம்மரிஷி மலை உச்சியில், மாலை 6 மணி அளவில் மிகப்பெரிய செம்பு கொப்பரையில் 1,008 மீட்டர் திரி, 300 கிலோ நெய், 1,000 லிட்டர் எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் மற்றும் 210 செட் வாணவேடிக்கையுடன் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

விழாவை முன்னிட்டு, மலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை உடனுறை ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும், சாதுக்களுக்கு வஸ்திரம், அன்னதானமும் வழங்கப்படுகிறது. இந்தவிழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ், அதிகாரிகள், நீதிபதிகள், அரசு அலுவலர்கள், சிவசேனா உள்பட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

தீப கொப்பரை தயார்படுத்தும் பணி

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாதாஜிரோகிணி ராஜகுமார், இளம் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் சுவாமி மற்றும் குருகடாட்சம் மெய்யன்பர்கள் செய்துவருகின்றனர். கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்பட உள்ள 1, 008 மீட்டர் திரி மற்றும் தீப கொப்பரையை தயார்படுத்தும் பணிகள் நேற்று தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்