பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் - 879 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 879 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்த சட்டம், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அனைத்து பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்கல் செய்வதை கைவிட வேண்டும். ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வு பெற வற்புறுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நேற்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதையொட்டி நெல்லை மாவட்டத்திலும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். தொ.மு.ச. பொதுச்செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மோகன், ஏ.ஐ.டி.யு.சி. காசிவிசுவநாதன், எச்.எம்.எஸ். சுப்பிரமணியன், ஐ.என்.டி.யு.சி. கண்ணன், ஏ.ஐ.சி.சி.டி.யு. சங்கரபாண்டியன், டி.டி.எச்.எப். சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தயார் நிலையில் நின்றிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மொத்தம் 420 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் வண்ணார்பேட்டையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதேபோல் மேலப்பாளையம் சந்தை முக்கில் எஸ்.டி.டி.யு., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்.டி.டி.யு. நெல்லை மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் வரகுணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், பொருளாளர் ஆரிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர் 30 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றிச்சென்றனர்.
அம்பை பூக்கடை பஜாரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் மாஞ்சோலை மைக்கேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. வண்ணமுத்து, ஏ.ஐ.டி.யு.சி. ராமகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. ஆதிமூலம், எச்.எம்.எஸ். பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 39 பெண்கள் உள்பட 116 பேரை அம்பை போலீசார் கைது செய்து அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைத்தனர்.
களக்காடு அண்ணா சிலை அருகே நடந்த மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும் படையார் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் சுகுமார், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 37 பேரை களக்காடு போலீசார் கைது செய்தனர்.
முக்கூடல் மேல பெரிய வீதி ராமசாமி கோவில் முன்பிருந்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்று, முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். எல்.பி.எப். லட்சுமணன், ஐ.என்.டி.யு.சி. வக்கீல் ஆறுமுகபூபதி, முருகன், சி.ஐ.டி.யு. கீதா மாரிசெல்வம், சந்திரசேகர், அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 83 பேரை முக்கூடல் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் வள்ளியூர், நாங்குநேரி, வீரவநல்லூர் ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் நெல்லை மாவட்டத்தில் 879 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தபால் இலாகா கோரிக்கைகளை வலியுறுத்தியும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு கோட்ட தலைவர் அழகுமுத்து தலைமையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதேபோல் வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நெல்லை கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தை சேர்ந்த 450 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நெல்லை காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் மதுபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வூதியர் சங்க தலைவர் செல்லப்பா, ஊழியர் சங்க நெல்லை கோட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.