தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; வாலிபர் சாவு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
ஸ்பிக் நகர்,
தூத்துக்குடி முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டைச்சாமி இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 23.) . இவர் என்.எல்.சி.யில் ஒப்பந்த ஊழியராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரும் இவரது அண்ணன் மகன் முத்துராஜூம் ஒரு மோட்டார் சைக்கிளில் முத்தையாபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை ரஞ்சித்குமார் ஓட்டினார். இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் முத்தையாபுரத்தை கடந்து தனியார் குடோன் அருகே சென்றபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரி திடீரென மேற்குப் பக்கம் உள்ள குடோனுக்கு செல்வதற்காக அஜாக்கிரதையாக டிரைவர் லாரியை திரும்பியதில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு ரஞ்சித்குமார், முத்துராஜ் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது.
அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். முத்தையாபுரம் போலீசார் அந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று மதியம் ரஞ்சித்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். முத்துராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.