தூத்துக்குடி அருகே ரூ.590 கோடி போதைப்பொருள் சிக்கியது: சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பா? கைதான 6 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

தூத்துக்குடி அருகே ரூ.590 கோடி போதைப்பொருள் சிக்கியது தொடர்பாக கைதான 6 பேருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-11-27 05:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து கடலோர காவல்படையினர் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி அருகே கன்னியாகுமரியில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இலங்கையை சேர்ந்த ஒரு படகு வந்தது. அந்த படகில் கடலோர காவல்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அதில் 6 பேர் இருந்தனர். அந்த படகில் உள்ள ஒரு காலி டீசல் டேங்க்கில் 100 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் படகில் 20 சிறிய பெட்டிகளில் மறைத்து வைத்து இருந்த கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்னும் போதைப்பொருள் இருந்தது. அதே போன்று 5 நவீன ரக துப்பாக்கிகளும் இருந்தன. இவற்றை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். ஹெராயின் மதிப்பு ரூ.500 கோடி என்று கூறப்படுகிறது. மெத்தம் பீட்டாமைன் போதைப் பொருளானது மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.90 கோடி என்றும் கூறப்படுகிறது.

மேலும், படகில் இருந்து துரையா வகை சேட்டிலைட் செல்போனையும் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பிரீபெய்டு வகையை சேர்ந்த இந்த செல்போன் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் கடலோர காவல்படை ரோந்து கப்பல் நேற்று காலை 7.30 மணியளவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தடைந்தது. தொடர்ந்து படகில் இருந்த 6 பேரையும் கடலோர காவல்படையினர், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல இயக்குனர் புருனோ, இன்ஸ்பெக்டர் பரிமளா, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கியூ பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரகுமார், இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா, ‘ரா‘ உளவுப்பிரிவு அதிகாரி சார்லஸ் மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் 6 பேரும் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல் (வயது 40), வானகுல சூரியஜீவன் (30), சமீரா (32), வர்ணகுலசூர்யா மனுவேல் ஜீவன் பிரசன்னா (29), நிசாந்த் கமகே, லட்சுமணகுமார் (37) என்பது தெரியவந்தது.

இவர்கள் 6 பேரும் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்த ஒரு படகை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அங்கிருந்து போதைப் பொருட்களை வாங்குவதற்காக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு சென்று உள்ளனர். அதே நேரத்தில் ஈரானில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஒரு பாய்மரப் படகில் போதைப் பொருளை ஏற்றி வந்து, நடுக்கடலில் வைத்து இலங்கையைச் சேர்ந்த படகில் ஏற்றி உள்ளனர். அதன்பிறகு 6 பேரும் போதைப் பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கடல் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக படகின் ஒரு டீசல் டேங்கில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் டீசல் காலியானதால் மேற்கொண்டு படகை இயக்க முடியாமல் தவித்து உள்ளனர். அப்போது காற்றின் வேகத்தில் அந்த படகு இந்திய கடல் பகுதிக்குள், தூத்துக்குடி அருகே உள்ள கன்னியாகுமரியில் இருந்து 10 கடல்மைல் தொலைவுக்குள் வந்து உள்ளது. அப்போது கடலோர காவல்படையினரிடம் பிடிபட்டனர் என்று விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்கள் 6 பேருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? அல்லது அந்த கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து கடலோர காவல்படையினர் கைது செய்யப்பட்ட 6 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 6 பேரையும் மதியம் 12.30 மணிக்கு பழைய துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மாலையில் அங்கிருந்து ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இவர்கள் மீது மதுரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த உள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரையும் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரைக்கு அழைத்து செல்ல உள்ளனர்.

மேலும் செய்திகள்