இடைவிடாது பெய்த பலத்த மழையால் பாகூர் பகுதியில் ஏரிகள் நிரம்பின - வயல்களில் தண்ணீர் புகுந்ததால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
இடைவிடாது பெய்த மழையினால் பாகூர் பகுதியில் ஏரிகள் நிரம்பின. வயல்களில் தண்ணீர் புகுந்ததால்ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் மூழ்கின.
பாகூர்,
பாகூர் பகுதியில் ‘நிவர் புயல்’ காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் மழையின் அளவு நேற்று காலை 6 மணி வரை உள்ள நிலவரப்படி 277 மி.மீ. ஆகும். தொடர்ந்து அப்பகுதியில் மழையும் காற்றும் அதிகமாக இருந்தது. இதனால் பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரியில் 21 ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன.
புதுச்சேரி மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரியில் 1.74 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரு சில தினங்களில் மற்ற 2 ஏரிகளான பனையடிக்குப்பம், மணமேடு பகுதி ஏரிகளும் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சித்தேரி அணைக்கட்டு, கொமந்தான் அணைகள் நிரம்பி வழிகின்றன. காட்டுக்குப்பம் ஏரி நிரம்பி பாக்கியலட்சுமி நகர் பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது.
கடலூர்-பாண்டி ரோடு, கிருமாம்பாக்கம், பிள்ளையார் குப்பம் ஆகிய பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொமந்தான் மேடு படுகை அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலம் மூழ்கி வழிகிறது. இதில் குளித்து விளையாட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
பாகூர் கிருமாம்பாக்கம், கன்னியகோயில், தவளகுப்பம், அபிஷேகப்பாக்கம், சேலியமேடு, கரையாம்புத்தூர் ஆகிய பகுதி வீடுகளில் மழைநீர் வெளியேறாமல் கடல் போல் காட்சியளிக்கிறது. பாகூர், மடுகரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, இருளன் சந்தை, குருவிநத்தம், ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிரிகள் மூழ்கின.
கிருமாம்பாக்கம், மணப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம், பனையடிகுப்பம் ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகூர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சேதமாகி உள்ளது. ஆங்காங்கே மின்சார வயர்களும் அறுந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை ஒரு சில இடங்களில் மீண்டும் மின் சப்ளை வழங்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சமுதாய நலக்கூடம், அரசுப் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் சமைக்க முடியாமல் தவிப்பதால் இந்த மையங்களை தேடி ஏராளமானோர் வருகின்றனர். இதனால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களுக்காக உணவு தயாரிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாகூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வாய்க்கால், ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர்களை மூ.புதுகுப்பம் முகத்துவாரம் பகுதியின் வழியாக கடலில் கலக்கும் அதனை தூர்வாரப்படாமல் இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை அதிரடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரினர். அதன்பின்பு அங்கு மழை நீர் வடிய தொடங்கியது.
மேலும் மரங்களை வெட்டவும் தாழ்வான பகுதியில் உள்ள மழைநீரை அகற்றவும் பொதுப்பணித்துறை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய், மின்சாரம், தீயணைப்பு ஆகிய துறையை சேர்ந்தவர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட நல்லவாடு, புதுகுப்பம், கன்னியகோவில், பாகூர் ஆகிய பகுதிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் அமைச்சர் கந்தசாமி, பாகூர் தாசில்தார் குமரன், பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் ஆகியோர் முகாமிட்டு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.