ஊத்துக்கோட்டையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் - பொதுமக்கள் அவதி

ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2020-11-26 22:00 GMT
ஊத்துக்கோட்டை,

நிவர் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென்று உயர்ந்து வந்தது. தொடர்ந்து வரும் தண்ணீர் வரத்தை கருத்தில் கொண்டு அணையில் இருந்து ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் ஊத்துக்கோட்டை தரைப்பாலத்தில் தண்ணீர் வரத்து அதிகமானது. பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததால் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகமானது. இதனை தொடர்ந்து நேற்று காலை தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

பொதுவாக ஊத்துக்கோட்டை ஆற்றுப்பாலத்தில் நீர்வரத்து குறைந்தவுடன் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவது வழக்கம். வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த தரைப்பாலம் வழியாகதான் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும் தரைப்பாலத்தை தாண்டி போந்தவாக்கம், அந்தேரி, பேரிடிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம், பெருஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி உள்பட 30 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எந்த ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றாலும் தரைப்பாலத்தை கடந்து ஊத்துக்கோட்டை வர வேண்டி உள்ளது. இந்த நிலையில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள். மழை முழுவதுமாக நின்றபின் புதிய தரைப்பாலம் அமைத்த பிறகுதான் வாகனங்கள் வந்து செல்ல முடியும். மாற்று வழியில் வந்து செல்ல வேண்டுமானால் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை பார்வையிட்டனர். அவர்களுடன் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் சித்திக், அருணாச்சலம், ரேஷன் சுப்ரமணி, சக்திவேல், தங்ககுமார், வக்கீல் வெற்றித்தமிழன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்