மாமல்லபுரத்தில் சூறாவளி காற்றில் முறிந்து விழுந்த மரங்கள்
மாமல்லபுரத்தில் சூறாவளி காற்றில் மரங்கள் முறிந்து விழுந்தன.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று புயலால் அதிகாலை வீசிய சூறாவளி காற்றில் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேருடன சாய்ந்தன. மாமல்லபுரம் வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி பணியாளர்கள் காற்றில் வேருடன் சாய்ந்த மரங்களை மரம் அறுக்கும் கருவி மூலம் துண்டு, துண்டாக அறுத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதே போல் தொல்லியல் துறைக்கு சொந்தமான பாரம்பரிய சின்னங்களான ஐந்துரதம், கடற்கரை கோவில் போன்ற இடங்களில் விழுந்த மரங்களை தொல்லியல் பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சூறாவளி காற்றால் மாமல்லபுரம் சாலைகள் முழுவதும் பல்வேறு இடங்களில் அடித்து வரப்பட்ட குப்பைகள் தேங்கி சாலைகள் முழுவதும் குப்பை கிடங்குகள் போல் காட்சி அளித்தன. இதனை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றி சாலைகளை சுத்தம் செய்தனர். புயலால் மாமல்லபுரத்தில் நேற்றும் கடல் சீற்றம் குறையவில்லை. கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் குறையும் வரை அங்குள்ள கடற்கரைக்கு செல்பி எடுக்கும் ஆவலில் பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு வரவேண்டாம் என காவல் துறை சார்பில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனால் மாமல்லபுரம் கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட வில்லை. நேற்று வீசிய சூறாவளி காற்றால் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை யாக மின்தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.