கூடுவாஞ்சேரியில், இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி - படகு மூலம் போலீசார் மீட்டனர்
கூடுவாஞ்சேரியில் இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணியை படகு மூலம் போலீசார் மீட்டனர்.;
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நந்திவரம் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக கூடுவாஞ்சேரி மகாலட்சுமி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமி நகரில் வசிக்கும் மூதாட்டிகள் இருவர் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருப்பதாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் படகுடன் மகாலட்சுமி நகர் பகுதிக்கு சென்று வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த 2 மூதாட்டிகளை பத்திரமாக மீட்டு அரசு முகாமில் தங்க வைத்தனர். அதே பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க நிறைமாத கர்ப்பிணி ஒருவரின் வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் நிறைமாத கர்ப்பிணி என்ன செய்வது என்று அறியாமல் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் நேரில் சென்று அவரை படகு மூலம் பத்திரமாக மீட்டு நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு குழந்தை பிறப்பதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.