ஆவடி அருகே 6 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி
ஆவடி அருகே புதியதாக கட்டப்பட்டு வந்த வீட்டின் 6 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து பலியானான்.
ஆவடி,
ஆவடி அடுத்த வெள்ளானூர் ஆர்ச் அந்தோணியார் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 34). லாரி டிரைவர். இவரது மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு மோகன்ராஜ் (6) என்ற மகனும், 2 மகள்களும் உண்டு. சிறுவன் மோகன்ராஜ் வெள்ளானூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் கமலக்கண்ணன் வீட்டிற்கு அருகில் மற்றொருவருக்கு சொந்தமான வீடு ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. அந்த வீட்டிற்காக கழிவுநீர் தொட்டி அமைக்க சுமார் 6 அடி ஆழமுள்ள பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இதற்கிடையே தொடர்ந்து பெய்து வரும் மழையால், அந்த தொட்டியின் பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. இந்நிலையில் மோகன்ராஜ் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்த போது, கழிவு நீர் தொட்டி அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கால் தவறி உள்ளே விழுந்தான்.
இதனால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பதை சிறுவனின் தாயார் சங்கீதா பார்த்து கூச்சலிட்டார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு, ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.