மளிகைக்கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவர் சிக்கினார்

மதுரையில் மளிகைக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவர் சிக்கினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-11-25 22:15 GMT
மதுரை,

மதுரை கூடல்புதூர் அருகே உள்ள பனங்காடி பகுதியை சேர்ந்த உமாசந்திரா அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு ஒருவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்தார்.

மளிகை பொருட்களை வாங்கி விட்டு அந்த நபர் ரூ.500 நோட்டை கொடுத்தார். அந்த ரூபாய் நோட்டை பார்த்தபோது அது சாதாராண ரூபாய் நோட்டு போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்துள்ளது. இதுகுறித்து அந்த நபரிடம் கேட்டபோது, அவர் உடனடியாக சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த காதர்பாட்சா (வயது 54) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் மேலும் மூன்று 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் கள்ள நோட்டு என்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவருக்கு அந்த ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரித்ததில், மதுரையை சேர்ந்த சிலர் அவரிடம் கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவரது நண்பர்கள் சிலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மளிகைக் கடை உரிமையாளர் உமாசந்திரா அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்