டாஸ்மாக் கடை மீண்டும் திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தூர் அருகே டாஸ்மாக்கடை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-25 22:00 GMT
சாத்தூர்,

சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அவர்கள் கடை செயல்பட எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கடையை அதிகாரிகள் அகற்றினர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அங்கு மதுபாட்டில்கள் வந்து இறங்கின. இதையறிந்த அந்த பகுதி மக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் கோட்டாட்சியர் காசி செல்வி, தாசில்தார் சிவக்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். பின்னர் மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்