தொழில் அதிபரை வழிமறித்து நகை-பணம் பறித்த 5 பேர் கைது
சேலத்தில் தொழில் அதிபரை வழிமறித்து நகை-பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சேலம்,
சேலம் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் தளவாய்பட்டி பகுதியில் சோதனை நடத்திய போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது காரில் 5 பேர் கொண்ட கும்பல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் காடையாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (வயது 25), கிச்சிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (32), அழகாபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (23) மற்றும் திருச்சியை சேர்ந்த 18 வயது சிறுவன், ராஜா (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த விசைத்தறி வைத்து நடத்தி வரும் தொழில் அதிபர் தமிழ்ச்செல்வன் என்பவரை வழி மறித்து அவர் அணிந்திருந்த நகை மற்றும் ரூ.9 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் சிறையில் இருந்த போது நண்பர்களாக பழகி உள்ளனர். பின்னர் சிறையில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்த பிறகு சேலத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கும் நோக்கில் அவர்கள் சுற்றித்திரிந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.