நிவர் புயல் அதிதீவிரம்: நாகை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - வீடுகளுக்குள் மக்கள் முடங்கியதால் வெறிச்சோடிய டெல்டா

நிவர் புயல் அதி தீவிரம் அடைந்துள்ளதையொட்டி நாகை துறைமுக அலுவலகத்தில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வீடுகளுக்குள்மக்கள் முடங்கியதால் நேற்று டெல்டா வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-11-25 22:00 GMT
நாகப்பட்டினம்,

வங்கக்கடலில் உருவான ‘நிவர்’ புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்த புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும்போது நாகை மாவட்டத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புயலின் திசை, வேகம் மாறுபடும் பட்சத்தில் மாற்றங்கள் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாகை துறைமுகத்தில் நேற்று 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. (பெரிய அபாயம்: துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பது 8-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் பொருள் ஆகும்).

நாகை துறைமுகத்தில் முதல் நாள் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டும், 2-வது நாள் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்ட நிலையில் 3-வது நாளான நேற்று 8-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் நாகை மாவட்ட மீனவர்களும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.

கஜா புயலின்போது ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் ‘நிவர்’ புயல் தாக்கினால் தங்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்ற ஒருவிதமாக அச்சத்தில் நாகை மாவட்ட மக்கள் உள்ளனர். கஜா புயலின்போது விழுந்த மரங்களுக்கு பதிலாக வைக்கப்பட்டுள்ள மரங்கள் தற்போதுதான் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் நிவர் புயல் தாக்கினால் வளர்ந்து வரும் மரங்களும் சேதம் அடைந்து விடும். அதேபோல் வீடுகளும் பலத்த சேதம் ஏற்படும் என்று பொதுமக்கள் ஒருவிதமான அச்சத்தில் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள 1500 விசைப்படகு மற்றும் 6 ஆயிரம் பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருப்பூண்டியில் 19 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடல் சீற்றம் கடுமையாக காணப்படுவதால் மீன்வளத்துறையினர், மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மழை மற்றும் காற்று வீசுவதை பொறுத்து மின்வாரியத்தினர் மின் வினியோகத்தை அவ்வப்போது நிறுத்தி வருகின்றனர். புயல் எச்சரிக்கையின் காரணமாக நேற்று முன்தினம் மதியம் முதல் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கி கிடந்தனர். இதனால் சாலைகளில் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

எந்த நேரமும் நெரிசல் நிறைந்து காணப்படும் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலை, நீலா தெற்கு வீதி, பெரியகடைத்தெரு உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

நாகை மாவட்டம் மட்டுமல்லாது திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் நேற்று காலையில் இருந்து பகல் முழுவதும் விட்டு, விட்டு தொடர்ந்து மழை பெய்த வண்ணமாக இருந்தது. பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் பொதுமக்கள் நெரிசல் நிறைந்து காணப்படும் கடைவீதிகள், பஸ் நிலையங்கள், முக்கிய சாலைகள் உள்பட அனைத்து சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் டெல்டா வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்