பழையகாயல் குளத்தின் கரை உடைந்தது விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது
பழையகாயல் குளத்தின் கரை உடைந்ததால், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதில் ஆத்தூர் அருகே பழையகாயலுக்கும், கோவங்காடுக்கும் இடையில் உள்ள பழையகாயல் குளம் நிரம்பியது. சுமார் 170 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
இந்த நிலையில் பழையகாயல் குளத்தின் மறுகால் பாயும் பகுதியின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வாழை பயிரிடப்பட்டு இருந்த சுமார் 70 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதுகுறித்து விவசாயிகள், அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே ஏரல் தாசில்தார் இசக்கிராஜ், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர்கள், ரகுநாதன், மகேசுவரி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, குளத்தின் கரையில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிட்டனர்.
தொடர்ந்து புயல் நிவாரண பணிக்குழுவினரும் அங்கு விரைந்து வந்தனர். பழையகாயல் குளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் மூட்டைகளை அடுக்கி வைத்து சீரமைத்தனர்.