நாராயணசாமி காரை மறித்து மீனவர்கள் முற்றுகை புயல் - முன்னெச்சரிக்கை ஆய்வுக்காக சென்றபோது பரபரப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கனகசெட்டிகுளம் கடற்கரையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீனவர்கள் அவரது காரை முற்றுகையிட்டனர்.

Update: 2020-11-25 22:30 GMT
புதுச்சேரி,
 
நிவர் புயல் அச்சுறுத்தலையொட்டி புதுவையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கடலோர கிராமங்களான கனகசெட்டிகுளம், காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி ஆகிய கிராமங்களுக்கு சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடலோர பகுதியில் நிறுத்தி வைத்துள்ள படகுகளை கிரேன் மூலம் பாதுகாப்பான இடங்களில் கொண்டு செல்லும்படி உத்தரவிட்டார். அங்கிருந்த மீனவ மக்களிடம் பேசுகையில், புயல் கடந்து செல்லும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். எனவே பாதுகாப்பு முகாம்களுக்கு சென்று தங்க வேண்டும், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அப்போது கனகசெட்டி குளம் பகுதி மீனவர்கள் நாராயணசாமியின் காரை வழி மறித்து முற்றுகையிட்டனர். அவரிடம், ‘அரசு சார்பில் ஏற்கனவே நிவாரணம் எதையும் தரவில்லை. ரேஷன் அரிசி வழங்கவில்லை. தற்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ளோம்’ என்று அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர். அவர்களிடம், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக நாராயணசாமி உறுதி அளித்தார். இதன்பின் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மீட்பு மையத்திற்கு நாராயணசாமி சென்றார். அங்கு வளர்ச்சி ஆணையர் அன்பரசு, மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் மற்றும் அதிகாரிகளுடன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், ‘தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எங்காவது மழை நீர் தேங்கினால் அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவையில் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வு, ஆலோசனையின் போது அமைச்சர் ஷாஜகான் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்