நிவர் புயல் எச்சரிக்கை வீராம்பட்டினம் கடற்கரையில் கலெக்டர் ஆய்வு
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக வீராம்பட்டினம் கடற்கரையில் மாவட்ட கலெக்டர், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்
அரியாங்குப்பம்,
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் புதுவை அருகே மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் (பொறுப்பு), துணை கலெக்டர் சுதாகர், தாசில்தார் ராஜேஷ் கண்ணா, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று காலை வீராம்பட்டினம் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சின்னவீராம்பட்டினம், புதுக்குப்பம், நல்லவாடு ஆகிய கிராமங்களிலும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தினர். மேலும் புயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் புயல் பாதுகாப்பு பகுதியில் தங்கியிருக்க வலியுறுத்தினர். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அரசின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா ஆகியோர் வீராம்பட்டினம் கடற்கரையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.