மூடிகெரே அருகே பரிதாபம்: 5 வாலிபர்கள் குளத்தில் மூழ்கி பலி - திருமண விருந்தில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

மூடிகெரே அருகே திருமண விருந்தில் பங்கேற்ற 5 வாலிபர்கள் குளத்தில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

Update: 2020-11-25 21:30 GMT
சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வசதாரே என்னும் கிராமம் உள்ளது. இங்கு ஹிரேகெரே என்ற குளம் உள்ளது.

இந்த நிலையில் இந்த குளத்தில் நேற்று மதியம் குளிப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த ரகு (வயது 22), சந்தீப் (23), இவர்களுடன் இவர்களது நண்பர்களாகிய அஞ்சவரள்ளி கிராமத்தை சேர்ந்த தீபக் (22), திலீப் (24), சுதீப் (22) ஆகியோர் சென்றனர். இவர்கள் 5 பேரும் குளத்தில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடி வந்தனர்.

அப்போது குளத்தின் கரையில் அவர்களது சட்டைகள், செருப்புகள் கிடந்தன. ஆனால் 5 பேரையும் காணவில்லை. இதனால் அவர்கள் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதிய உறவினர்கள், ஆல்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் குளத்தில் 5 பேரையும் தேடினர்.

சுமார் 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள், குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

பின்னர் 5 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரகுவின் தங்கை சந்தியாவுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. நேற்று ரகுவின் வீட்டில் திருமண கறி விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட தீபக், திலீப், சுதீப் ஆகியோரும், ரகு, சந்தீப்புடன் சேர்ந்து குளத்தில் குளிக்க சென்றதும், அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி 5 பேரும் பலியானதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக ஆல்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண விருந்தில் கலந்துகொண்ட 5 பேரும் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஜமானரின் உடலுடன் சென்ற ஆம்புலன்சை பின்தொடர்ந்த உருக்கம்
குளத்தில் மூழ்கி பலியானவர்களில் ஒருவர் சந்தீப். சந்தீப் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாயுடன் பொழுதை கழிப்பதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். இதனால் சந்தீப் மீது அந்த வளர்ப்பு நாய் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சந்தீப் குளத்தில் மூழ்கி இறந்ததை அறிந்து அவரது குடும்பத்தினர் குளத்தின் கரைக்கு வந்தனர். அவர்களுடன் வளர்ப்பு நாயும் வந்தது. அந்த வளர்ப்பு நாய், சந்தீப்பின் உடலை பார்த்து அதன் அருகில் போய் நின்று கொண்டது. அவரது உடலை சுற்றி சுற்றி வந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் அழுததை பார்த்து, நாயும் சோகமாக காட்சி அளித்தது. பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சந்தீப்பின் உடலை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்சில் ஏற்றிய போது வளர்ப்பு நாய் பின் தொடர்ந்து ஓடியது. அதன் பின்னரும் நாய் ஆம்புலன்ஸ் வேனை பின்தொடர்ந்து சிறிது தூரம் வரை ஓடியது. பின்னர் அந்த நாயை, சந்தீப்பின் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். எஜமான் இறந்ததை தொடர்ந்து வளர்ப்பு நாய் சாப்பிடாமல் சோகத்தில் இருந்து வருகிறது. இந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்