தீவிரமடையும் ‘நிவர்’ புயல்: கடலூர் துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நிவர் புயல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.;
கடலூர் முதுநகர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதில் கடந்த 21-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது புயலாக மாறி இருக்கிறது. நிவர் என புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. புயல் இன்று (புதன்கிழமை) மாலைக்கு பின் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிவர் புயல் தமிழக கடற்கரையை நெருங்கி வருவதால், குறிப்பாக கடலூர் அருகே வருவதால் கடலூர் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு புயலானது துறைமுகத்தை நெருங்குகிறது அல்லது துறைமுகத்துக்கு அருகே புயல் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படுத்தப்படும் என்பது பொருளாகும்.
வேகம் குறைந்தது
அதேபோன்று மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்த புயலின் வேகமானது, நேற்று மதியத்துக்கு பின்னர் சற்றே குறைந்து மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. மதியம் 12 மணி நிலவரப்படி புதுச்சேரியிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து 3 மணி வரை ஒரே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. அதன்பின்னர் புயல் 5 முதல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து மாலை 4 மணிக்கு 402 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.
நிவர் புயல் நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பது வானிலை மைய அதிகாரிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் புயல் நகரும் வேகம் குறைய குறைய புயலின் தீவிரம் அதிகரிக்கும் என்பது தான். இதன் மூலம் நிவர் அதி தீவிர புயலாக மாறி தமிழக கடற்கரையை தாக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
புயல் கரையை கடக்கும் போது கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் கனமழையுடன் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளிகாற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூரில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடனும் காணப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக கடலூர் துறைமுக பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் மீனவர்கள் தங்களது பைபர் படகுகள் (சிறிய ரக) மற்றும் மீன்பிடி வலைகளை தங்களது வசிக்கும் பகுதிகளில், அதாவது அவர்களின், வீடுகளுக்கு முன்பு, மீனவ கிராமங்களிலுள்ள பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.
மேலும் கடற்கரை கிராமம் எங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர போலீசார் லாரிகள், பொக்லைன் எந்திரங்கள், கயிறு, மணல் மூட்டைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.