கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை தொடங்க வெள்ளோட்டம் 44 சுற்றுலா பயணிகளுடன் நடந்தது

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு இன்று முதல் படகுகளை இயக்க ஏற்பாடாக, நேற்று மாலை 44 சுற்றுலா பயணிகளுடன் படகு போக்குவரத்து வெள்ளோட்டம் நடந்தது.;

Update: 2020-11-25 11:39 GMT
கன்னியாகுமரி, 

கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கடந்த 8 மாதங்களாக கன்னியாகுமரிக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகையும் குறைந்தது.

இதனால் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வியாபாரிகளும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி குமரிக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவிலில் உளள கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தின் போது கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.

சமூக இடைவெளி

இதைத்தொடர்ந்து அன்று முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலாளர் சகாய சேவியர், துணைச் செயலாளர் பீர் முகமது, பொருளாளர் பாலன் மற்றும் வியாபாரிகள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை நேரில் சந்தித்து படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து படகு போக்குவரத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. இதன் ஒரு பகுதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை வளாகத்தில் அமைந்துள்ள கியூசெட்டில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி வசதியாக வெள்ளை நிற வட்டமிடும் பணியும் நடந்தது.

வெள்ளோட்டம்

இந்நிலையில் நேற்று மாலை கடலில் படகு வெள்ளோட்டம் விடப்பட்டது. அப்போது 44 சுற்றுலா பயணிகளுடன் சோதனை ஓட்டமாக கடலில் குறிப்பிட்ட தூரம் வரை சென்றுவிட்டு கரை திரும்பியது.

இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது:-

படகு போக்குவரத்தை தொடங்குவதற்கான அறிவிப்பு வந்ததையடுத்து 44 பயணிகளுடன் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை திறக்காததால் கடலில் சிறிது தூரம் சென்று விட்டு கரை திரும்பியது. நாளை (அதாவது இன்று) முதல் வழக்கம் போல காலை 8 மணிக்கு படகுசேவை தொடங்குகிறது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் படகு போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்