கொரோனா காலத்தில் சிறப்பான சேவை: ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி பச்சிளம் குழந்தை பிரிவுக்கு முதல் பரிசு

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு மாநில அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த பிரிவு டாக்டர்களுக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2020-11-25 11:31 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவு கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது. இதனைப் பாராட்டி தேசிய சுகாதார திட்டம் சார்பில் மாநில அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த பரிசை சென்னையில் நடந்த விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். அதனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு டாக்டர் ரமேஷ் பெற்றுக் கொண்டார்.

பாராட்டு

பின்னர் அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரியிடம் பரிசை ஒப்படைத்தார். அவரை, டீன் சுகந்தி ராஜகுமாரி, ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், மருத்துவத்துறை இணைப் பேராசிரியர் ஜான்கிறிஸ்டோபர், டாக்டர்கள் கிங்ஸ்சிலி, எட்வர்ட் ஜாண்சன் மற்றும் பலர் பாராட்டினர்.

இதுகுறித்து டீன் சுகந்தி ராஜகுமாரி கூறியதாவது:-

1,500 குழந்தைகள்

இந்த ஆஸ்பத்திரியில் இயங்கிவரும் பச்சிளம் குழந்தைகள் தீவிர நல சிகிச்சைப் பிரிவு 28 படுக்கை வசதிகள் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு சுமார் 1,300 முதல் 1,500 வரையிலான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு ஆண்டும் வெளி மருத்துவமனைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 350 முதல் 500 பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இங்கு குறைமாத குழந்தைகள், எடை குறைந்த குழந்தைகள், மூச்சுத் திணறல் ஏற்படுகின்ற குழந்தைகள், தொற்று கிருமி தாக்கப்பட்ட குழந்தைகள், மஞ்சள் காமாலை ஏற்பட்ட குழந்தைகள், நுரையீரல் வளர்ச்சி குறைந்த குழந்தைகள், பிறவி குறைபாடு உள்ள குழந்தைகள் ஆகிய அனைத்து குறைபாடுள்ள குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

செயற்கை சுவாசக் கருவி, சிபாப் எந்திரம், வார்மர் போட்டோதெரபி போன்ற மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன் இங்கு செயல்பட்டு வருகிறது. குறைமாதத்தில் பிறக்கும் 85 சதவீத குழந்தைகள் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

தீவிர சிகிச்சை

கர்ப்பிணி தாய்மார்களுக்கு குறைபாடு உள்ள பச்சிளம் குழந்தை வளர்ச்சி பற்றிய ஆலோசனை வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணிகளுக்கு நடந்த பிரசவத்தில் 73 பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு நல்லமுறையில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பயனாக தேசிய சுகாதார திட்டம் சார்பில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மாநில அளவில் முதல் பரிசு வழங்கி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்