வேப்பந்தட்டை அருகே, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை - போலீசார் விசாரணை
வேப்பந்தட்டை அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் மில்லத் நகரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது(வயது 35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரஹ்மத்நிஷா(29). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, ஷபா(7), ஷனா(4) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
ரஹ்மத்நிஷா, தனது குழந்தைகளுடன் மில்லத் நகரில் உள்ள தங்கள் வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்தார். அதே வீட்டில் கீழ் தளத்தில் ரஹ்மத்நிஷாவின் மாமனார் சபியுல்லா, மாமியார் முஸ்திரிபேகம் ஆகியோர் குடியிருந்து வருகின்றனர். மாமனார், மாமியாருடன் ரஹ்மத்நிஷா கடந்த சில மாதங்களாக பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ரஹ்மத்நிஷா தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரஹ்மத்நிஷா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், ஷபாவும், ஷனாவும் படுத்த நிலையில் இறந்து கிடந்தனர்.
இதையடுத்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். தாய் மற்றும் மகள்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால், கடந்த 2 நாட்களுக்கு முன்பே அவர்கள் இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, ரஹ்மத்நிஷா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியிருக்கும் என்பதால், அந்த 2 நாட்களிலும் ரஹ்மத்நிஷா மற்றும் குழந்தைகள் நடமாட்டம் அங்கு இல்லாமல் இருந்திருக்கக்கூடும். ஆனால் அதுதொடர்பாக அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ரஹ்மத்நிஷாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. அதுபற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.