சத்துவாச்சாரியில் பாதிரியாரை தாக்கி கத்தி முனையில் ரூ.9 லட்சம் கொள்ளை - போலீஸ் விசாரணை
வேலூர் சத்துவாச்சாரியில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கி கத்தி முனையில் ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு பாதிரியாராக மலையப்பன் (வயது 60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஆலயத்தின் அருகேயுள்ள அறையில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு 4 மர்ம நபர்கள் பாதிரியார் அறைக்கு வந்துள்ளனர். அவர்கள் அறையின் ஜன்னல் வழியாக பாதிரியாரை அழைத்து, புதிதாக இருசக்கர வாகனம் வாங்கி உள்ளோம். அதற்காக ஜெபித்து நீண்ட காலம் நல்ல நிலையில் இயங்க ஆசீர்வதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அதனை உண்மை என்று நம்பிய மலையப்பன் அறைக்கதவை திறந்து வெளியே வந்தார்.
அப்போது 4 பேரும் திடீரென பாதிரியாரை தாக்கி மீண்டும் அறையின் உள்ளே தள்ளினர். அவர்கள் கத்தி முனையில் மிரட்டி பாதிரியாரை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து கட்டி போட்டுள்ளனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த ரூ.9 லட்சம், 4 பவுன் சங்கிலியை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மர்மநபர்கள் தாக்கியதில் பாதிரியாரின் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் பாதிரியார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக பாதிரியார் மலைப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிரியார் மலையப்பன் மர்மநபர்கள் 4 பேர் தன்னை தாக்கி நாற்காலியில் கட்டி வைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றதாகவும், தானாகவே கயிற்றை அவிழ்த்துவிட்டு புகார் அளிக்க போலீஸ் நிலையம் வந்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அவர் எவ்வாறு தானாகவே கயிற்றை அவிழ்த்தார் என்று தெரியவில்லை. மேலும் அவருடைய அறையில் கயிறு எதுவும் இல்லை. அதனால் இந்த கொள்ளை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
அவர் அறையில் ரூ.9 லட்சம் வைத்திருந்தது தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளோம். பாதிரியார் முன்னுக்கு பின் முரண்பாடான தகவல்களை தெரிவிக்கிறார். அதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியின் அருகேயுள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்கள் 4 பேரின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.