முதுமலை அருகே மீட்கப்பட்ட 2 புலி குட்டிகள் வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு

முதுமலை அருகே மீட்கப்பட்ட 2 புலி குட்டிகள் வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன.

Update: 2020-11-24 23:54 GMT
வண்டலூர், 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகத்தில் உள்ள சீமர்குழி ஓடை பகுதியில் 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பெண் புலி இறந்து கிடந்த இடத்திற்கு அருகே பிறந்து சில நாட்களே ஆன 2 ஆண் புலி குட்டிகள் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தது. இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த 2 ஆண் புலி குட்டிகளை அங்கிருந்து மீட்டனர். மீட்கப்பட்ட புலி குட்டிகள் 20 நாட்களுக்கு முன்பு பிறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட புலி குட்டிகளை கால்நடை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளை நீலகிரி மாவட்டத்தில் வைத்து பராமரிப்பதற்கு சிறப்பு மையங்கள் இல்லாததால், வண்டலூர் பூங்காவுக்கு அனுப்புவதற்கு வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

வண்டலூர் பூங்காவில்...

இதனையடுத்து முதுமலையில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் நேற்று முன்தினம் இரவு வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பூங்காவில் உள்ள அதிகாரிகளிடம், 2 புலி குட்டிகளை முதுமலையில் இருந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். முதுமலையில் இருந்து சிறப்பு வாகனத்தில் புலிக்குட்டிகள் வரும் போது உடல் சோர்ந்து விடாமல் இருப்பதற்காக அடிக்கடி மருத்துவர்கள் பரிசோதனை செய்து புலி குட்டிகளுக்கு பால் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கினார்கள்.

வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட 2 புலி குட்டிகளை பெற்று கொண்ட பூங்கா அதிகாரிகள் அதனை வண்டலூர் பூங்கா வளாகத்தில் உள்ள விலங்குகள் ஆஸ்பத்திரியில் வைத்து 24 மணி நேரமும் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். இந்த 2 புலிக்குட்டிகள் வருகையால் பூங்காவில் வங்கப்புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்