தூத்துக்குடி அருகே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1,000 மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் பரபரப்பு

தூத்துக்குடி அருகே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1,000 மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.;

Update: 2020-11-24 18:25 GMT
தூத்துக்குடி,

வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘நிவர்‘ புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதே நேரத்தில் குளிரும் இருந்தது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், கப்பல்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

படகுகள் நிறுத்தம்

மேலும், மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் அங்கு 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் நாட்டுப்படகு மீனவர்களும் பெரும்பாலும் கடலுக்கு செல்லவில்லை. கரையில் நிறுத்தப்பட்டு உள்ள நாட்டுப்படகுகள், கயிறு கொண்டு இறுகக்கட்டி கூடுதல் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் மீன்வளத்துறை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத வகையில் அறிவுறுத்தி வருகின்றனர்.

கரைக்கு திரும்பாத மீனவர்கள்

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக சென்ற 130 விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பாமல் உள்ளன. இந்த படகுகளில் 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் விரைவில் கரைக்கு திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்