வீடு வாடகைக்கு எடுப்பது போல் நடித்து பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
வீடு வாடகைக்கு எடுப்பது போல் நடித்து பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வேலூர்,
வேலூரை அடுத்த காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பரிமளா (வயது 57). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி பரிமளா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த 3 பேர் அந்த வீட்டின் மாடியில் இருந்த சிறிய வீட்டுக்கு வாடகைக்கு வர விருப்பம் உள்ளதாக கூறினர். மேலும் வாடகை விவரம் போன்றவற்றை கேட்டு, வீட்டை நோட்டமிட்டு சென்றனர்.
இந்த நிலையில் மறுநாள் பிற்பகல் 2 மணி அளவில் வீட்டில் பரிமளா மட்டும் தனியாக இருந்த போது 3 பேரும் மீண்டும் வந்தனர். அப்போது அவர்கள் பரிமளாவிடம் மாடி வீட்டை திறந்து காண்பிக்குமாறு தெரிவித்தனர். பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அவர்கள் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, பரிமளாவை தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகைகள் என சுமார் 24 பவுன் நகைகள், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர். மாலையில் வீட்டுக்கு வந்த அவரது குடும்பத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பரிமளாவை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா, களமருதூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் அருள்நாதன் (29), விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு, சின்னகுப்பம் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் பாலா என்ற பாலமுருகன் (24), காட்பாடி, விருதம்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் பிரவீன்குமார் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் தடயங்களை மறைக்கும் பொருட்டு இந்த கொலை சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய கத்தி, மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அன்பூண்டி ஏரியில் தீ வைத்து எரித்தனர்.
விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சுமார் 108 முறை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி பாலசுப்பிரமணியன் அளித்த தீர்ப்பில், அருள்நாதன் உள்பட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி பிரியா ஆஜரானார்.