ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி பொருத்திய சக்கர நாற்காலி - குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள்குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகளை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்.

Update: 2020-11-23 22:00 GMT
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவர்கள் நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடன் உதவி, நிதி உதவி, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு என 265 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தசைத்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பேட்டரி பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.

அதேபோன்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு இலவச தையல் எந்திரமும், 2 பேருக்கு இலவச சலவை பெட்டியும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இளவரசி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்