ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்
பழங்குடியினர் சான்றிதழ், வீட்டுமனை பட்டா உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி,
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய, மாநிலஅரசுகளை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் பி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர், ஜவ்வாதுமலை டி.மணிமாறன், மாவட்ட செயலாளர் லட்சுமணன், மாவட்ட குழு நிர்வாகி பி.ரவி, துணைத்தலைவர் சி. கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரா.சரவணன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “2006 வன உரிமைச் சட்டத்தை அரசு தீவிரமாக அமுல் படுத்திட வேண்டும். அனைத்து பழங்குடி மக்களுக்கும் காலதாமதம் இல்லாமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். அனைத்து பழங்குடி மக்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும்.
மலைவாழ் மக்களுக்கு கேரள அரசாங்கத்தை போல ரூ.6 லட்சம் மதிப்பிலான தரமான தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்து அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.போளூர் வட்டம் கல்பட்டு மதுரை இரும்புலி கிராமத்தில் மலை புறம்போக்கு நீர்வரத்து ஓடையை ஆக்கிரமிப்பை அகற்றி வேண்டும்.
மலைவாழ் மக்கள் மூன்று நான்கு தலைமுறையாக அனுபவித்துவரும் அனுபவம் நிலங்களை சாகுபடி செய்ய விடாமல் வனத்துறையினர் தண்டம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். அனைத்து பழங்குடி கிராமங்களிலும் குடிநீர், சாலை, தெருவிளக்கு, அமைத்து தர வேண்டும்” என்றார்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏராளமான மலைவாழ் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்திருந்தனர். இதில் மாநில பொதுச்செயலாளர் இ.கங்காதரன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் பி.கண்ணன், மாவட்ட செயலாளர்கள் பி.செல்வம், சுப்பிரமணி, மாநில பொருளாளர் ஜி.ஏழுமலை, வட்டார செயலாளர் கட்சி சி.அப்பாசாமி, ஆர்.சிவாஜி, மாவட்ட செயலாளர் பிரகலாதன் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராம் (பொறுப்பு) திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சென்றிருந்ததால் நீண்ட நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மூர்த்தியிடம மதிய உணவுக்குப் பிறகு கோரிக்கை மனுவினை வழங்கினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.