குடகனாற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்த கிராம மக்கள்

குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் மனு கொடுக்க படையெடுத்து வந்தனர்.

Update: 2020-11-23 22:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மேற்குத்தொடர்ச்சி மலையில் கூழையாறு, குடகனாறு ஆகியவை உற்பத்தியாகின்றன. இந்த ஆறுகளின் தண்ணீர் குடகனாறு, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால், காமராஜர் அணை ஆகியவற்றுக்கு செல்கிறது. இதற்கிடையே காமராஜர் அணைக்கு தண்ணீர் செல்லும் இடம் மற்றும் பிரதான ராஜவாய்க்காலில் தடுப்பணை கட்டப்பட்டது.

இதனால் குடகனாற்றில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று போனது. எனவே, குடகனாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று குடகனாறு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து தண்ணீர் பங்கீடு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

அதன்பேரில் அந்த வல்லுனர் குழுவினர் 3 முறை ஆய்வு செய்து விட்டனர். எனினும், இதுவரை குடகனாறு தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால் குடகனாறு பாசன விவசாயிகள், பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், பொன்மாந்துறை, வேடசந்தூர் உள்பட குடகனாறு பாசன கிராமங்களை சேர்ந்த மக்கள், தண்ணீர் திறக்கக்கோரி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்து வந்தனர்.

மேலும் குடகனாற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், தாலுகா இன்ஸ்பெக்டர் தெய்வம் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதிகாரிகளிடம் பேசுவதற்கு, கிராம மக்களில் சிலரை போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர்.

அங்கு கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடகனாற்றில் தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதிஅளித்தார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவமும், குடகனாற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார். அப்போது அவருடன் சில விவசாயிகளும் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்