பிரதமர் மோடியின் படம் வைக்கக்கோரி யூனியன் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் தர்ணா

பிரதமர் மோடியின் படம் வைக்கக்கோரி யூனியன் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-23 22:00 GMT
பரமக்குடி,

பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராக 2 பா.ஜ.க.வினர் உள்ளனர். இந்தநிலையில் அந்த யூனியன் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், போகலூர் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க.வினர் யூனியன் ஆணையாளர் ராஜகோபாலிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அவர், மாவட்ட கலெக்டரிடம் இருந்து முறையான கடிதம் வந்த பிறகு தான் அனுமதி வழங்க முடியும் என தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யூனியன் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்பு அவர்களாகவே அலுவலகத்தின் நுழைவுவாயிலில் பிரதமர் மோடியின் படத்தை வைத்து விட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து யூனியன் ஆணையாளர் ராஜகோபால் கூறியதாவது:-பிரதமர் மோடியின் படத்தை யூனியன் அலுவலகத்தில் வைக்க வேண்டும் எனக் கேட்டனர். மாவட்ட கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்று, அரசு அனுமதி அளித்தபிறகே பிரதமரின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று கூறினேன் என்றார்.

மேலும் செய்திகள்