மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத முசிறி மாணவனின் டாக்டர் கனவு நனவாகுமா? அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பு

முசிறி மாணவனுக்கு, மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் ஏழ்மை நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனது மகனின் டாக்டர் கனவை நனவாக்கிட அரசின் உதவியை பெற்றோர் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Update: 2020-11-23 22:00 GMT
முசிறி,

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேளகாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். பந்தல் அமைக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள். அவர்களில், இளைய மகன் பாரதி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தார்.

ஆரம்பம் முதலே நன்றாக படித்து வந்த இவர், எப்படியாவது டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தனது லட்சிய கனவாக கொண்டிருந்தார். இதற்காக, வீட்டில் இருந்தபடியே ‘நீட்’ தேர்விற்கு தயாரானார். ‘நீட்’ தேர்வு எழுதிய அவர், அதில் 191 மதிப்பெண்கள் பெற்றார்.

தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் காரணமாக மதுரை ராஜா முத்தையா தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு பாரதிக்கு கிட்டியது. ஆனால், அதற்கான கல்லூரி கட்டணத்தை செலுத்த பாரதி குடும்பத்தால் இயலவில்லை.

கடன் வாங்கலாம் என்றாலும் கூலி வேலை செய்து அதனை அடைக்க இயலாது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாரதியின் பெற்றோர் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தனது மகன் பாரதி சிறு வயதில் இருந்தே நன்றாக படிப்பான். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது அவனது தீராத ஆசை. அதற்காக தன்னை தயார் படுத்தி வந்தான். அவன் ஆசைப்பட்ட படியே மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது. ஆனால், நாங்கள் ஏழ்மையான குடும்பம் என்பதால் கல்லூரி கட்டணத்தை கட்ட இயலவில்லை. ஏழை மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசும், தி.மு.க.வும் மருத்துவ படிப்புக்கான செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், தனது மகன் பாரதியின் மருத்துவர் கனவை நனவாக்க அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.

மேலும் செய்திகள்